பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்குதளத்தில், விரிவுப்படுத்தும் பணிக்காக மின் கம்பம் அகற்றப்படாமல் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, கிள்ளை, முடசல் ஓடை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், படகில், வெள்ளாற்று முகத்துாவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் பிடித்த மீன்களை பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்திற்கு கொண்டு வந்து இங்குள்ள வியாபாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் சிறு வியாபாரிகள் மீன்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், மீன் விற்பனை செய்யவும் போதுமான இடவசதி இல்லாததால், தற்போது மீன் இறங்குதளம் விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரிவுப்படுத்தப்படும் மீன் இறங்குதளத்தில், புதியதாக சிமென்ட் தளம் அமைக்கப்படுகிறது. சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் மற்றும் உயர் மின் விளக்கு கோபுரத்தை அகற்றப்படாமல், அப்படியே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மீன் இறங்குதளத்திற்கு மீன்களை ஏற்றிச்செல்ல வரும் கனரக மற்றும் சிறு வாகனங்கள் வந்துச்செல்ல மிகவும் சிரமாக ஏற்படும். எனவே, சிமென்ட் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பம் மற்றும் உயர் மின் விளக்கு கோபுரத்தை அகற்றிவிட்டு வேறு இடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளம்பர பலகை மிஸ்சிங்
பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன் இறங்கு தளத்தில், 200 மீட்டர் அளவில் விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி எந்த திட்டத்தில் நடக்கிறது. திட்டத்தின் பெயர், திட்டத்தின் மதிப்பு, காலக்கெடு, கான்ட்ராக்டர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் பணி நடக்கும் இடத்தில் வைக்க வேண்டும். ஆனால், எந்த விபரங்களும் இல்லாமல் பணி நடைப்பெற்று வருகிறது.