விருத்தாசலம்: விழுப்புரம் - விருத்தாசலம் இடையே உளுந்துார்பேட்டை மேம்பாலம் பகுதியில் ரயிலில் இருந்து பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்க ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியன் ரயில்வே நிர்வாகம், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மூலம் ரயில் பாதை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில், இருவழி ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டது.இருவழி ரயில் பாதையால், கிராசிங் பிரச்னை தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தாலும், ரயில் பயணிகள் விபத்தில் சிக்கி இறப்பது அதிகரித்துள்ளது.வேகம் அதிகரிப்புகடந்த காலங்களில் ஒரு வழிப் பாதையில் டீசல் இன்ஜினில் 60 முதல் 70 கி.மீ., வேகம் வரை சென்ற ரயில்கள், தற்போது இருவழி ரயில் பாதையில் 110 கி.மீ., வேகத்தில் செல்கின்றன. இது பயண நேரத்தை குறைத்தாலும், அதிவேகமாக செல்லும் ரயில்களில் இருந்து பயணிகள் தவறி விழுந்து பலியாவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம் - விருத்தாசலம் இடையே உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில், சேலம் - சென்னை புறவழிச்சாலை மேம்பாலத்தை கடக்கும்போது, கடந்த சில மாதங்களில் 7 பேர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தண்டவாளம் சாய்வு அதில், புறவழிச்சாலை மேம்பாலம் அமைந்துள்ள பூ.மாம்பாக்கம் பகுதியில், உளுந்துார்பேட்டை மார்க்கமாக ரயில் பாதை 1 முதல் 2 டிகிரி வரை சாய்வாக உள்ளது. இப்பகுதியை அதிவேகமாக கடக்கும் ரயில்களில் படியில் அமர்ந்தோ அல்லது கதவை திறந்து நின்றபடி வரும் பயணிகள் தடுமாறி கீழே விழுந்து விடுவதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி உட்பட 7 பேர் பலி
கடந்த மே 2ம் தேதி, சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த 7 மாத கர்ப்பிணி கஸ்துாரி,20; தவறி விழுந்து இறந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல், கடந்த 2023ம் ஆண்டு மே 2ல் தென்காசி முகமது ரபீக் மகன் சேக் முகமது அலி,24; ஜூன் 16ல் உளுந்துார்பேட்டை அடுத்த மேப்புலியூர் ராஜவேல் மகன் வசந்தவேல்,24; ஆகஸ்டு 15ல் அரியலுார் முருகேசன் மகன் வினோத்குமார்,31; அதே மாதம் 22ல் உளுந்துார்பேட்டை ராஜமாணிக்கம், 85; இந்தாண்டு பிப்., 23ல் அரியலுார் மாவட்டம், குழுமூர் கருப்புசாமி, 60, ஏப்ரல் 12ல் ராஜஸ்தான் மாநிலம், மானீஷ், 19; என்ற இளைஞர் தவறி விழுந்து இறந்துள்ளனர்.ரயில்கள் 110 கி.மீ., வேகத்தில் செல்லும் போதை இந்த விபத்துகள் நடக்கும் நிலையில், வரும் காலங்களில் 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளது. அப்போது, பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.காரணம் என்ன?பொதுவாக, தென் மாவட்டங்களுக்கு வந்து செல்லும் ரயில்களின் பொதுப்பயண பெட்டியில், கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால், ரயில் பெட்டியின் கதவை மூட வாய்ப்பில்லை. இதுவே விபத்துக்கு பிரதான காரணமாக உள்ளது.எனவே, ரயிலில் இருந்து பயணிகள் தவறி விழுந்து பலியாவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து ரயில்வே பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'உளுந்துார்பேட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே குறிப்பிட்ட பகுதியில் 1 முதல் 2 டிகிரி அளவில் வளைவு இருக்கும். இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பயணிகள் விழிப்புடன் பயணிக்க வேண்டும்.பொதுவாக இந்தியன் ரயில்வேயில் பயணிகள் பெட்டி 24, ஒரு இன்ஜின், ஒரு பிரேக் வேன் (கார்டு பெட்டி) ஆகியன இருக்கும். இந்த பெட்டிகளை கணக்கிட்டு, 750 மீட்டருக்கு லுாப்லைன் அமைக்கப்பட்டிருக்கும். கூடுதலாக ஒரு சலுான் (அதிநவீன வசதிகளுடன் கூடிய ஸ்பெஷல் கோச்) இணைக்கலாம்.உதாரணமாக வந்தே பாரத் ரயில் வரும்போது, அதற்கு முன்னால் செல்லும் ரயில், இந்த லுாப்லைனில் நிறுத்தப்படும். தற்போது பயணிகள் பெட்டியை கூடுதலாக்கினால், அவசர காலங்களில் லுாப்லைனை பயன்படுத்த முடியாது. மாறாக, ஸ்லீப்பர் கோச் உள்ளிட்ட முன்பதிவு பயண பெட்டிகளை அகற்றி, பொதுப்பயண பெட்டிகளை கூட்டினால் ரயில்வே நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படும். இதற்கு சாத்தியம் இல்லை.பொதுப்பயண பெட்டியில் சீட் கிடைக்காத பயணிகள் படியிலும், கதவின் அருகிலும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இது ரயிலின் வேகத்துக்கு வெளியே தள்ளும். அதுபோல், ரயில் நிலைய நடைமேடை லோ, மீடியம், ைஹ என மூன்று வகையில் இருக்கும். எனவே படியில் அமர்ந்து வருவோரின் கால்கள் நடைமேடையில் சிக்கி, துண்டாகி விடும். இதுபோல் சென்னை போன்ற பெரு நகரங்களில் தினசரி ஏராளமானோர் காயமடைகின்றனர்.எனவே, ரயிலில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். ரயில் படியில் அமர்வது, கதவுகளை திறந்து வைத்து பயணம் செய்யக் கூடாது' என்றார்.