உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் 3 பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கு: துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

நெல்லிக்குப்பத்தில் 3 பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கு: துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே தாய், மகன், பேரனை கொலை செய்து, உடல்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை தேடி,ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு போலீஸ் தனிப்படைகள் விரைந்துள்ளது. கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கமலீஸ்வரி, 60; இவர்களது மகன்கள் சுரேந்திரகுமார், 39, சுமந்த்குமார், 37.சுரேந்திரகுமாருக்கு திருமணமாகி ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் வசித்து வருகிறார்.சுமந்த்குமாருக்கு டிம்பிள் என்ற பெண்ணுடன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவர், உடன் பணியாற்றிய அஞ்சும் சுல்தானா என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு இசாந்த், 8; என்ற மகன் இருந்தார்.நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பத்தில் பாட்டி கமலீஸ்வரியுடன் இசாந்த் தங்கி, கடலூரில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். தற்போது சுமந்த்குமார் ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சுமந்த்குமார், காராமணிக்குப்பம் வந்து, தாய் மற்றும் மகனுடன் தங்கியிருந்தார். கடந்த 13ம் தேதி முதல் அவர்களது வீடு பூட்டியிருந்தது. 15ம் தேதி அங்கிருந்து துர்நாற்றம் வீசவே, சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நெல்லிக்குப்பம் போலீசக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, வீட்டிற்குள் கமலீஸ்வரி, சுமந்த்குமார், இசாந்த் ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மேலும், கொலை வழக்கு தொடர்பாக, கொலை செய்யப்பட்டவர்கள் வீட்டு டிரைவர், பால் கொடுப்பவர், வீட்டு வேலை செய்யும் பெண் ஆகியோரிடம் டி.எஸ்.பி.பழனி விசாரணை நடத்தினார். கடலூர் மாவட்டதில் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் எஸ்.பி.தனிப்பிரிவு போலீசார் 7 பேருக்கு மேல் நெல்லிக்குப்பத்தில் முகாமிட்டு கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

பெங்களூரு பெண் வரவழைப்பு

கொலை செய்யப்பட்ட சுமந்த்குமாருடன் குடும்பம் நடத்தி பிரிந்து சென்ற அஞ்சும் சுல்தானாவை நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, கொலை சம்மந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. என்னுடன் தற்போது சுமந்த்குமார் தொடர்பில் இல்லை என,கூறியுள்ளார்.விசாரணை முடிந்து வெளியேவந்த அப்பெண் கூறுகையில், எனக்கும் சுமந்த்குமாருக்கும் பிறந்த குழந்தை இசாந்த். அவன் கொலை செய்யப்பட்டதை அறிந்து போலீசார் அழைத்ததாலும் நேரடியாக வந்தேன். சுமந்த்குமாரும் நானும் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததால் எனது மொபைல் எண்ணை சுமந்த்குமார் பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டார். ஆனால் எனது மகன் இசாந்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தேன். எனது மகனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். என்னை போலீசார் விசாரனைக்கு எப்பொழுது அழைத்தாலும் வர தயாராக இருக்கிறேன் என கூறினார்.

தனிப்படை பெங்களூரு விரைவு

கடலுார் எஸ்.பி., ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்ய, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.அதில் அழகிரி எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படை போலீசார், கொலை செய்யப்பட்ட சுமந்த்குமார் தங்கியிருந்த பகுதியில் விசாரிப்பதற்காக ஹைதராபாத்திற்கும், மற்றொறு டீம் பெங்களூருவுக்கும் விரைந்துள்ளது.

போலீஸ் நிலையத்தில் பரபரப்பு@

நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கூடினர். பிரேத பரிசோதனையை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளை உடனியாக கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். கொலை சம்பவம் குறித்து துப்பு ஏதும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டமிட்டு நடந்த கொலை

கொலை செய்யப்பட்ட இடத்தில் எந்த தடயமும் கிடைக்க கூடாது என்பதில் கொலையாளிகள் தெளிவாக இருந்ததால், இந்த கொலைகளை, ஏற்கனவே, அனுபவம் உள்ள கூலிப்டையை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.கொலை செய்யபட்ட கமலீஸ்வரி மற்றும் சுமந்த்குமார் பயன்படுத்திய மொபைல்போன்களில் இருந்த சிம் கார்டுகளை கழற்றி எடுத்து சென்றுள்ளனர். அதில் இருந்த பதிவுகள் அனைத்தையும் அழித்துவிட்டு அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றி பதிவுகளை மீட்டெடுக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். மேலும் சிம்கார்டு நிறுவனங்களிடம் இருந்து அவர்களது நம்பர்களின் தொடர்பு விபரங்களை கேட்டு வாங்கியுள்ளனர்.அதிலிருந்து தொடர்பு கொண்டவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.நெல்லிக்குப்பம் மூவர் கொலை தொடர்பாக, போலீசுக்கு இதுவரையில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை