உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி அலுவலக வாசலில் பொது மக்கள் கருப்பு துணி் கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் நகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட செல்வராஜ் நகர், விவேகானந்தர் தெரு பொது மக்கள், 20க்கும் மேற்பட்டோர், வாயில் கருப்பு துணிகட்டி, நகராட்சி அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவேகானந்தர் தெருவில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருக்கமடைந்து இரவில் மக்கள் துாங்க முடியாமல் தவிக்கிறோம். சுகாதார சீர்கேடு காரணமாக பொது மக்களுக்கு நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில், நகராட்சி அதிகாரி ஒருவர் பார்வையிட்டபோது, தனிநபர் ஒருவர் மிரட்டல் காரணமாக கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியும் கிடப்பில் போடப்பட்டது.எனவே, கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறினர். அவர்களிடம் நகராட்சி பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.அப்போது, விரைவில் கோரிக்கை நிறைவேறாவிட்டால், பாய் படுக்கையுடன் நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை