ரத்த சோகையில்லா கடலுார் திட்டம் : கலெக்டர் துவக்கி வைப்பு
கடலுார்: கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் 'ரத்த சோகையில்லா கடலுார்' திட்டம் துவக்க விழா நடந்தது. ரத்த சோகை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கலெக்டர் பேசியதாவது: ரத்த சோகை என்பது, உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல போதிய ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்கள் இல்லாததாலும், இரும்புச்சத்து குறைபாடாலும் ஏற்படும் பிரச்னையாகும். சில மரபணு ரீதியான நோய்களால் ரத்த சோகை ஏற்படலாம். ரத்த சோகை இருந்தால், உடல் முழுதும் ஆக்ஸிஜன் விநியோகம் குறைகிறது. இதனால் சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மாணவர்களின் கற்றல் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. வளரிளம் பருவத்தில் ரத்தசோகை இருப்பதினால் மாணவிகளின் கற்றல் திறன் பாதிப்பதோடு வருங்காலத்தில் திருமணத்திற்கு பின் கருவுற்றால் அவருக்கும், பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வரும் காலங்களில் கடலுாரில் ரத்த சோகை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கலெக்டர் (பயிற்சி) மாலதி, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.