| ADDED : ஜன 25, 2024 05:02 AM
சிதம்பரம : காட்டுமன்னார்கோவிலில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டார்.காட்டுமன்னார்கோவில், அரசு மருத்துவமனை அருகே துவங்கிய பாதயாத்திரை, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ் நிலையத்தை சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் மருதை, மாநில பட்டியலணி துணைச் செயலாளர் சரவணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அண்ணாமலை நடந்து சென்றபோது, பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்றுகொண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். வழியில் பெண்கள், சிறுவர், சிறுமியர்களுடன் பேசி, அவர்களுடன் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார். பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பஸ் நிலையத்தில் திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் பேசினார்.அண்ணாமலை நடந்து வரும்போது, காட்டுமன்னார்கோவில் பகுதி 5ம் வகுப்பு மாணவி சிவசக்தி என்பவர், தனக்கு ஹிந்தி படிக்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். இதை கேட்ட அண்ணாமலை, எந்த மொழியையும் விருப்பத்தோடு படிக்கலாம் என, கூறிவிட்டு சென்றார். இதே போன்று, வழிநெடுகிலும், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் கூறியபடி சென்றார்.