உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கடலூர் : அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு தனித்தேர்வுகள் இன்று 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இத்துறையில் நடத்தப்பட்ட பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மட்டும் தேர்வு எழுத விரும்புவோர் 'எச்' வகை விண்ணப்பத்தையும், 10ம் வகுப்பு தேர்வு முடித்து 2011 ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அன்று பதினாறரை வயது பூர்த்தியடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க 'எச்பி' வகை விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும். அதில் மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்திற்கு 50 ரூபாயும், இதர கட்டணமாக 35 ரூபாயும், நேரடி தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் 150 ரூபாயும், இதரக் கட்டணமாக 35 ரூபாய் மற்றும் திறன் தேர்விற்கு 2 ரூபாய் என மொத்தம் 187 ரூபாயை கருவூலகத்தில் செலுத்த வேண்டும்.

கடலூரில் உள்ள அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகம், சி.இ.ஓ., டி.இ.ஓ., அலுவலகங்களிலும், புதுச்சேரியில் இணை இயக்குனர் அலுவலகம், காரைக்காலில் சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து அதனுடன் கருவூலகத்தில் பணம் செலுத்தி இன்று (12ம் தேதி) மாலை 5.45 மணிக்குள் கடலூரில் உள்ள அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ