உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாநகராட்சியில் ரூ. 540 கோடியில் திட்ட பணிகள் ; விரைவாக முடிக்க அறிவுறுத்தல்

கடலுார் மாநகராட்சியில் ரூ. 540 கோடியில் திட்ட பணிகள் ; விரைவாக முடிக்க அறிவுறுத்தல்

கடலுார்: கடலுார் மாநகராட்சி பகுதியில் 540 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி கூறினார். நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது; கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட வரதராஜா நகர், என்.ஜி.ஓ., நகர், லோகம்பாள் கோயில் நகர், மரியசூசை நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 12 வார்டு பகுதியில் 14,134 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் 148.70 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. 5.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா சந்தையில் 122 புதிய கடைகள், முதுநகர் பகுதியில் 5.27 கோடி ரூபாய் மதிப்பில் பக்தவச்சலம் மார்க்கெட் பணி நடக்கிறது. வெள்ளிக் கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெற ரூ. 4 கோடி மதிப்பில் அழகிய நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடக்கிறது. மஞ்சக்குப்பத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 28.67 கோடி ரூபாய் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. சுப்பராயலு பூங்கா அருகே 4.63 கோடி ரூபாய் மதிப்பில் மீன் அருங்காட்சியகம், 36 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 540 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நடந்து வருகிறது. அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். மாநகராட்சி ஆணையாளர் முஜிபர் ரஹ்மான், செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை