| ADDED : ஆக 06, 2011 02:18 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கூழ் வியாபாரியை கொலை செய்து மணிமுக்தா ஆற்றில் புதைத்த நான்கு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்தவர் கூழ்மணி (எ) சின்ன துரை, 40; கோர்ட்டு முன் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வந்தார். கொலை மற்றும் கொள்ளை வழக்கு மற்றும் ரவுடி கும்பலுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போனார். அவரது மனைவி சித்ரா, 38, கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் டெல்டா பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நான்கு பேரிடம் விசாரித்தனர். அதில் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்த சண்முகம், 24, விருத்தாம்பிகை நகர் ரவி (எ) குள்ளன், 28, அசோக்குமார், 30, கருமணி, 25 ஆகிய நான்கு பேரும் சின்னதுரையை கழுத்தை அறுத்து கொலை செய்து மணிமுக்தா ஆற்றில் புதைத்து அவரது உடைகளை தீயிட்டு கொளுத்தியது விசாரணையில் தெரியவந்தது.கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சின்னதுரையின் உடலை இன்று 6ம் தேதி தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய பாருக்கான் என்பவர் உட்பட மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.