விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அரசு காப்புக்காட்டில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் உள்ளது.விருத்தாசலம் - கருவேப்பிலங்குறிச்சி சாலையின் இருபுறமும் அரசு காப்புக்காடு உள்ளது. இங்கு மான், மயில், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவு வசிக்கின்றன. இங்கு பழங்கள், கிழங்கு உள்ளிட்ட உணவு வகைகள் இல்லாததால், குடியிருப்புகளை நோக்கி விலங்குகள் படையெடுப்பது வாடிக்கையாகி விட்டது.சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தின் பிரதான சாலையோரம் காப்புக்காடு இருப்பதால், சாலையின் இருபுறமும் நுாற்றுக்கணக்கான குரங்குகள் உணவுக்காக காத்திருப்பது வழக்கம். இவற்றுக்கு பயணிகள், பொதுமக்கள் பழங்கள், பொரி போன்றவற்றை வீசிச் செல்கின்றனர்.இவற்றை சாப்பிட சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் சிக்கி பலியாவதும் தொடர்கிறது. அதுபோல், அழுகிய பழங்கள், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வதால், அவற்றை சாப்பிடும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.விருத்தாசலம் நகராட்சி எல்லையில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி எல்லையில் காப்புக்காடு இருப்பதால், இப்பகுதியில் குடியிருப்புகள் இல்லை. இதனால் சாலையின் இருபுறம் திறந்தவெளியில் கழிவுகள் வீசிச் செல்வது வாடிக்கையாகி விட்டது.மேலும், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள், கட்டட கழிவுகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் நாய், பன்றிகள் உலவுவதால் துர்நாற்றம் வீசுவதால், இவ்வழியே செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் முகத்தை மூடிச் செல்லும் அவலம் தொடர்கிறது.வேடப்பர் கோவிலில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் வரை நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ., தொலைவிற்கு குப்பைகளால் பாசன வாய்க்கால் துார்ந்து கிடக்கிறது. இதனால் பருவமழைக்கு ஆலிச்சிகுடி, சாத்துக்கூடல், விருத்தாசலம் புறவழிச்சாலையில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அப்போது, விருத்தாசலத்தில் ஆய்வுக்கு வந்த மண்டல வனத்துறை அதிகாரி, காப்புக்காடு பகுதியில் கழிவுகள் வீசுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். ஆனால், அவரது உத்தரவு இன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை.எனவே, வன விலங்குகள் நலன் கருதி கருவேப்பிலங்குறிச்சி சாலையோர அரசு காப்புக்காட்டில் கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாசன வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.