| ADDED : டிச 28, 2025 06:03 AM
கடலுார்: தினமலர் நாளிதழ், ருசி பால் இணைந்து நடத்தும் மெகா கோலப்போட்டி, கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் (இன்று 28ம்) தேதி நடக்கிறது. மார்கழி மாதத்தில் பெண்களின் கோலத் திறமைக்கு மகுடம் சூட்டி மகிழ்விக்கும் வகையில், புதுச்சேரி தினமலர் நாளிதழ் மற்றும் ருசி பால் இணைந்து நடத்தும், மெகா கோலப் போட்டி (இன்று 28ம்) தேதி காலை 7:00 மணிக்கு கடலுார் தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நடக்கிறது. கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மகளிர் போட்டியில் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க மொபைல்போன் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்றவர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு முகவரி ஆதாரத்திற்கான ஆதார் கார்டு சான்றுடன், காலை 6:00 மணிக்கு வர வேண்டும். சிக்கு (புள்ளி) கோலம், ரங்கோலி மற்றும் டிசைன் (ஆர்ட்) கோலம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கிறது. போட்டியில் நடுவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று கோலங்கள் தேர்வு செய்து, மெகா பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும், போட்டியில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் சிறப்பு தொகுப்பு பரிசாக வழங்கப்படும். போட்டி காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்க வேண்டும். போட்டியாளர்களுக்கு ஒதுக்கப்படும் 4க்கு 4 அடி அளவுள்ள இடத்தில் மட் டுமே கோலம் போட வேண்டும். கோலம் போட கோல மாவு உள்ளிட்ட பொருட்களை உடன் எடுத்து வர வேண் டும். கோலம் போட பதிவு செய்தவர்களுக்கு உதவியாக ஒருவர் அனுமதிக்கப்படுவர். கோலப்போட்டியில் பங்கேற்க வருபவர்களின் வசதிக்காக கடலுார் பஸ் நிலையம் மற்றும் தலைமை தபால் நிலைய பஸ் நிறுத்தம் பகுதிகளில் இருந்து அதிகாலை 4:30 மணி முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.