உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை ரயில் நிலையத்தில் விரிவாக்க பணி... தீவிரம்; ைஹடெக் வசதிகளால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி

விருதை ரயில் நிலையத்தில் விரிவாக்க பணி... தீவிரம்; ைஹடெக் வசதிகளால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி

திருச்சி - சென்னை, சேலம் - கடலுார் ரயில் மார்க்கத்தில் விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இவ்வழியாக பாசஞ்சர், சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், சரக்கு என தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இதனால் கல்வி, வியாபாரம், மருத்துவம் என கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மாவட்ட மக்கள் பயனடைகின்றனர்.இருப்பினும் ரயில் நிலைய நடைமேடைகள் 1, 2ல் மேற்கூரை, கழிவறை வசதிகள் இல்லை. அதுபோல், பயணிகள் காத்திருப்பு கூடம், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தன்னிறைவாக இல்லை. இதனால் பயணிகள் மழை, வெயில் காலங்களில் திறந்தவெளியில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 8.93 கோடி ரூபாயில் அலங்கார முகப்பு வளைவு, நவீன டிக்கெட் கவுண்டர், பயணிகள் காத்திருப்பு கூடம், நடைமேடைகளில் மேற்கூரை, குடிநீர், கழிவறை, கார் பார்க்கிங், கூடுதல் சிக்னல் அறைகள், நடைமேடை விரிவாக்கம் போன்ற மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 1,2 வது நடைமேடைகளில் புதிதாக மேற்கூரை, கழிவறைகள், ஓய்வறைகள், இருக்கைகள் கட்டப்பட்டு வருகின்றன.குறிப்பாக, பயணிகள் வசதிக்காக ரயில் நிலைய தரையில் ரயில் பெட்டிகளின் எண்களை குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் ரயில் பெட்டிகள் நிற்குமிடத்தை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.மேலும், முகப்பு பகுதியில் நவீன டிக்கெட் கவுண்டர், கார் பார்க்கிங், அலங்கார வளைவு உள்ளிட்ட பணிகள் 50 சதவீதத்திற்கு மேலாக முடிந்துள்ளன. ஓரிரு மாதங்களில் பணிகள் முழுமையாக முடிந்ததும், விரிவாக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு ரயில் நிலையம் 'ைஹடெக்' வசதிகளுடன் புத்துயிர் பெற்று வருவதால், விருத்தாசலம் மக்கள், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னைக்கு நேரடி ரயில் தேவை

தற்போது, விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் வசதியின்றி, பொதுப்பயண பெட்டியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நின்றபடியே செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத் மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் முறையிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து நீட்டிப்பு செய்யப்பட்டால், நான்கு மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ