கடலுார் மாவட்டம், பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள மாளிகைக்கோட்டம், தாழநல்லூர், கிளிமங்கலம், திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், செம்பேரி, சவுந்திரசோழபுரம், இறையூர், கொத்தட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை நெல் நடவு செய்திருந்தனர். ஆண்டுதோறும் குறுவை அறுவடையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் முன்கூட்டியே மாவட்டத்தில் அந்தந்த முக்கிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு இதுவரை திறக்கவில்லை.கடந்த சில நாட்களாக பெண்ணாடம் பகுதியில் குறுவை நெல் அறுவடை பணிகள் துவங்கி, நடந்து வருகிறது. அதன்படி, மாளிகைக்கோட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. திறக்கும் என்ற நம்பிக்கையில் அறுவடை செய்த நெல்லை முன்பதிவிற்காக கொள்முதல் நிலைய வளாகத்தில் நெல் மூட்டைகளை கொட்டி வைத்து, விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.இதேபோன்று, கிளிமங்கலம், வெண்கரும்பூர், திருமலை அகரம், பெண்ணாடம், தாழநல்லுார் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, விவசாயிகளின் நலன்கருதி, பெண்ணாடம் பகுதிகளில் கோடை மழையில் நெல் நனைவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஆய்வு செய்து நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாளிகைக்கோட்டம் விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் குறுவை நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு விற்க கொட்டி வைத்துள்ளோம். ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. அறுவடை பணிகளும் இப்பகுதியில் தீவிரமாக நடந்து வருவதால் நெல் மூட்டைகளும் அதிகளவில் நாளுக்குநாள் வர துவங்கும். தற்போது மாலை, இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று (நேற்று) பெய்த மழைக்கு சில நெல் குவியல் நனைந்துள்ளன. அதிகப்படியான நெல் நனைந்து சேதமாகும் முன் கொள்முதல் நிலையத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.