கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் கரையோர மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், கரையோர கிராம மக்களுக்கு வனத்துறையினர் முதலை எச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு கடலுக்குச் செல்கிறது. இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தால், மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் வசந்த பாஸ்கர், வனவர் பன்னீர்செல்வம், வனக் காப்பாளர் அன்புமணி ஆகியோர், பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான வேளக்குடி, அகரநல்லுார், பழைய நல்லுார் பகுதிகளில் முதலை நடமாட்டம் உள்ளதால் கால்வாய் மற்றும் குளங்களில் இறங்காமல் வேண்டாம் என வீடு வீடாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.