வி ருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவட பாதிப்படைந்த பெண் உட்பட நால்வருக்கு அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு கொடுத்த மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. விருத்தாசலம் அடுத்த கீரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், 60; கடந்த, 3 மாதங்களுக்கு முன் வீட்டின் மேலே வளர்ந்து வந்த மரக்கிளைகளை வெட்டும்போது, கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் காயமடைந்தார். நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்த பரமசிவம், கடந்த நவ.,13ம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு துாக்கி வரப்பட்டார். தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவக் குழு வினர் பரிசோதனை செய்ததில், கீழே விழுந்த விபத்தில் முதுகு தண்டுவடத்தில் உள்ள எல்.,1 எலும்பு முற்றிலுமாக முறிந்து, ஒன்று கூடாமல் இருந்தது தெரிந்தது. இதனால் பரமசிவம் படுத்த படுக்கையாக இருப்பதும், கை கால்களில் வலியுடன் எரிச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த நவ., 29ம் தேதி முடநீக்கியல் டாக்டர்கள் கோவிந்தராஜ், ராம்குமார், ஆனந்த், மயக்க மருந்து நிபுணர்கள் ராதா, தேவானந்த், முத்துக்குமார், செவிலியர்கள் சக்திபிரேமா, ரேவதி, ஜெயந்தி, அறுவை அரங்க உதவியாளர்கள் தங்கதுரை, வெற்றி, சபரி ஆகியோர் அடங்கிய குழுவினர் உடைந்த முதுகு தண்டுவட எலும்பை முற்றிலுமாக அகற்றிவிட்டு, 'கேஜ் கூடு' எனப்படும் கூண்டை பொருத்தினர். இந்த வகை அறுவை சிகிச்சைக்கு 5 முதல் 6 மணி நேரம் தேவைப்படும். 2 யூனிட் வரை ரத்தப்போக்கு இருக்கும். ஆனால், 3 மணி நேரத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த மருத்துவக் குழுவினர், யாருடைய உதவியும் இன்றி முதியவரை நடமாட வைத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 4 லட்சம் வரை செலவாகும் நிலையில், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ராமச்சந்திரன், 45, என்பவருக்கு கழுத்து எலும்பு தேய்மானத்தால் தண்டுவடம் பாதித்து இரு கைகள், கால்களும் மறுத்த நிலையில் அவதிப்பட்டார். அவருக்கு கழுத்து தண்டுவட எலும்பில் உள்ள ஜவ்வுகளை நீக்கி, இரண்டு எலும்புகளையும் பிளேட் வைத்து இணைத்து, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அவர் நலமுடன் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளார். மேலும், வடலுார் பன்னீர்செல்வம், 48; என்பவர் முதுகு தண்டுவடத்தில், எல் 3, எல் 4 எலும்புகள் விலகியதால், நிமிர்ந்து நேராக நடக்க முடியாமல், வலதுபுறம் சாய்ந்தபடி நடக்கும் நிலையில் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ஜவ்வு விலகிய இடத்தில் இரும்பு கூடு பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், தினக்கூலியான விஜயா, 45; என்பவர் முதுகு வலியால் அவதியடைந்த நிலையில், கடந்த நவம்பரில், சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு தேய்ந்திருந்த தண்டு வட ஜவ்வுகளை மட்டும் நீக்கியதால், தற்போது சுயமாக தனது வேலைகளை கவனித்துக் கொள்ளும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். ஓரிரு வாரங்களில் பூரண குணமடைந்து, தினக்கூலி வேலைக்கு செல்வார் என டாக்டர் தெரிவித்தனர். இது குறித்து தலைமை மருத்துவர் சாமிநாதன் கூறியதாவது: மாவட்டத்திலேயே முதன் முறையாக முதுகு தண்டுவட எலும்பை முற்றிலுமாக அகற்றிவிட்டு, 'கேஜ் கூடு' எனப்படும் கூண்டை பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் மூவருக்கு தண்டுவட பாதிப்பில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் குணமடைய செய்துள்ளோம். அனைவரும் ஓரிரு வாரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் கூட இதுவரை இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது இல்லை. முடநீக்கியல் பிரிவு மருத்துவர்களின் ஆர்வம், ஈடுபாடு காரணமாக சாத்தியமாகியுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தால் தனியார் ஸ்கேன் சென்டரில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பாதித்த நபர்களை குணப்படுத்தியுள்ளோம். கடந்தாண்டு ஜனவரி முதல், தற்போது வரை 75க்கும் மேற்பட்ட தண்டுவட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. மருத்துவக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார். அறுவை சிகிச்சை மூலம் குணமடைந்த நபர்களின் உறவினர்கள் மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.