கடலுார் பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வழியாக சின்னசேலம் கூட்ரோடு வரையிலான மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 275 கோடி ரூபாயில் (சி.வி.எஸ்., சாலை) நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.தொடர்ந்து, விருத்தாசலம் - மந்தாரக்குப்பம் இடையே பொன்னாலகரம் கிராமத்தில் சுங்கச்சாவடி அமைத்து, வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மேலும், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யை கடந்து புதுக்கூரைப்பேட்டை கிராமம் வரை 37 கோடி ரூபாயில் சர்வீஸ் சாலையுடன் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. முன்னதாக, கடலுார் - வேப்பூர் மார்க்கத்தில் பெரியார் நகர், தாசில்தார் அலுவலகம், ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், தென்கோட்டைவீதி, மணவாளநல்லுார் வரை இருபுறம் பிளாட்பார்ம் வசதியுடன் சாலை அகலப்படுத்தப்பட்டது.அதில், வேப்பூர் மார்க்கத்தில் உள்ள மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. ஆனால், மின் விளக்குகள், ஒளி பிரதிபலிப்பான்கள், எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லாமல் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனங்கள் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகின்றன.நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், புதுச்சேரியில் இருந்து எர்ணாகுளம் சென்ற அரசு விரைவு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பயணிகள் காயமடைந்தனர். இதே இடத்தில் கடந்த 30ம் தேதி புதுச்சேரியில் இருந்து திருப்பூருக்கு ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளாகி, பொது மக்களுக்கு கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 8க்கும் அதிகமான வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. ஆனால், இதுநாள் வரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கும் கொளஞ்சியப்பர் கோவில் எதிரே உள்ள சாலையில் சென்டர் மீடியனில் எச்சரிக்கை பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள், உயர்கோபுர மின் விளக்குகள் பொறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் போராட முடிவு
புகழ்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அருகே இருபுறம் உள்ள சென்டர் மீடியனில் வாரந்தோறும் வாகன விபத்துகள் நிகழ்கின்றன. நள்ளிரவு, அதிகாலை வேளைகளில் விபத்துகள் நிகழ்வதால் கிராம மக்கள் துாக்கத்தை விட்டு வந்து, மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். கோவில் வாசலில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, சென்டர் மீடியனில் பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தவில்லை என்றால், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.