உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராமப்புற இளைஞர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு! சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி

கிராமப்புற இளைஞர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு! சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி

விருத்தாசலம் : விருத்தாசலம், திட்டக்குடி பகுதியில் கிராமத்து இளைஞர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் சமூக ஆர்வலர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் மது அருந்துவது, புகை பிடிப்பது என்பது பேஷனாகி வருகிறது. பிறந்த நாள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் மது அருந்திவிட்டு பொது இடங்களில் ஆட்டம் போடுவது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. நாளடைவில் மதுவுக்கு அடிமையான இளைஞர்கள், விலை குறைவாக கிடைக்கும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். ஒரு சிறிய கஞ்சா பொட்டலம் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதனால் 150 முதல் 300 ரூபாய் செலவு செய்வதை காட்டிலும் குறைந்த விலையில் கஞ்சா கிடைப்பதால், இளைஞர்களிடம் பயன்பாடு அதிகரித்து விட்டது.மேலும், மதுபானத்தை தாண்டி, அதிக போதை கிடைப்பதால் கஞ்சா புகைப்பது இளைஞர்கள் இடையே வெகுவாக பரவியுள்ளது. மாவட்டத்தில் மது விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமான பாழான கட்டடங்கள், ஆற்றங்கரை, ஏரிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது.கஞ்சா பயன்படுத்தும் இளைஞர்கள், சில விநாடிகளில் சுய நினைவை இழக்கின்றனர். என்ன செய்கிறோம் என தெரியாமல் வழியில் செல்வோரை தாக்குவது, கடைகளை சூறையாடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.அவர்களை கண்டித்தாலும், அடித்தாலும் எந்த உணர்வு தெரியாது. கஞ்சா புகைத்து விட்டால் யானை பலம் வந்து விடும் என போலீசாரே கூறுகின்றனர். இதுபோன்ற நபர்கள், சுய நினைவை இழந்து பெற்றோரையே தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது.நகரங்களில் மட்டுமே விற்பனையான கஞ்சா, தற்போது கிராமங்களிலும் சரளமாக கிடைப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலுார், சிதம்பரம், நெய்வேலி பகுதிகளில் மட்டுமே கிடைத்த கஞ்சா பொட்டலங்கள், தற்போது விருத்தாசலம், திட்டக்குடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களிலும் தாராளமாக கிடைக்கிறது.படித்து முடித்து வீட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் இவற்றை பயன்படுத்துகின்றனர். போதை தலைக்கேறிய அவர்கள், அங்குள்ள பள்ளி கட்டடங்கள், நிழற்குடைகளில் ஜன்னல்கள், இருக்கைகளை உடைத்து வீசுகின்றனர். மேலும், தனியாக செல்லும் பெண்கள், சிறுமிகளிடம் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி, கஞ்சா விற்பனைக்கு எதிராக கடும் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதனால் கஞ்சா விற்ற சமூக விரோதிகள் பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். ஆனால், முழுவதுமாக விற்பனை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தலை தடுக்க முடியவில்லை.மது போதைக்கு அடிமையான நபர்களை மீட்க மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கஞ்சா போதைக்கு அடிமையான நபர்களும் பெருகி வருகின்றனர். இதைத் தவிர்க்க மாவட்டத்தில் கஞ்சா ஊடுறுவல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். இது குறித்து எஸ்.பி., ராஜாராம் தனிக்கவனம் செலுத்தி, கஞ்சா விற்போரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி