பெண்ணாடம்: பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி, வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதனை வாங்குவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள 15 வார்டுகளில் சேகரமாகும் மக்கும், மக்கா குப்பைகளை சிலுப்பனுார் சாலை பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் கொட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டதுடன் விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும், பொது மக்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.அதைத்தொடர்ந்து, கடந்த 2013ல் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட நிதி 29 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளாற்று கரையோரம் வள மீட்பு பூங்கா அமைக்கும் பணி துவங்கியது. நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமான பணிகள் பாதியில் நின்றது. பின்னர், 2015ல் பேரூராட்சி பொது நிதியில் இருந்து கூடுதலாக 81 லட்சம் ரூபாய் பெற்று மீண்டும் வள மீட்பு பூங்கா கட்டுமான பணி துவங்கி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது.தற்போது வள மீட்பு பூங்காவிற்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஆண், பெண் பணியாளர்கள், நிரந்தர பணியாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு, மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம், மண்புழு உரம், மண்புழு குளிர் நீர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும் இயற்கை உரங்களை விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களுக்கு தொழு உரமாக இடுவதற்கு ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும், தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்பவர்களும் செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மண்புழு குளிர் நீரை வாங்கிச் செல்கின்றனர்.உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை மற்றும் மண்புழு உரங்கள் மாதத்திற்கு 200 கிலோவில் இருந்து 500 கிலோ வரை விற்கப்படுகிறது. மேலும், வளமீட்பு பூங்கா வளாகத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள், பூ செடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்து உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், 'வளமீட்பு பூங்காவில் மாதம் 500 கிலோ வரை உரங்கள் உற்பத்தியாகிறது. அதில் மண் புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம் கிலோ 20, மண் புழு குளிர் நீர் லிட்டர் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இயற்கை உரங்கள் பயிர்களுக்கு இடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.