கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையால், குடியிருப்புகள், தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிக அளவாக சிதம்பரத்தில் 22.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு துவங்கிய கன மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில் அதிக அளவாக சிதம்பரம் பகுதியில் 22 செ.மீ., அளவில் மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கன மழை காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மாவட்டத்தில் சிதம்பரம் 228.8 மி.மீ., புவனகிரி 189 , சேத்தியாத்தோப்பு 155, அண்ணாமலைநகர் 147.8, காட்டுமன்னார்கோவில் 143, கடலுார் 136.6, கொத்தவாச்சேரி 130, லால்பேட்டை 121, பரங்கிப்பேட்டை 98.6, குறிஞ்சிப்பாடி 98, வடக்குத்து 94, ஸ்ரீமுஷ்ணம் 92.2, கலெக்டர் அலுவலகம் 84.4, வானமாதேவி 82, குடிதாங்கி 69.5, மேமாத்துார் 62, பண்ருட்டி 60, குப்பநத்தம் 67.2, பெலாந்துரை 56.4, விருத்தாசலம் 52, வேப்பூர் 37, கீழ்செருவாய் 32, லக்கூர் 31, காட்டுமயிலுார் 30, தொழுதுார் 25 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.கனமழையால் கடலுார் பாரதி ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து தண்ணீர் தேங்கியது. வடிகால் வாய்க்காலில் இருந்த அடைப்புகளை சரி செய்த பின்னர் தண்ணீர் வடிந்தது. பலத்த மழையால் புதுப்பாளையம் மரியசூசை நகரில் வடிகால் வசதி இல்லாததால் நகர் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.மேலும் திருப்பாதிரிபுலியூர், செம்மண்டலம், மஞ்சக்குப்பம், வன்னாரப்பாளையம், முதுநகர் குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.