| ADDED : பிப் 12, 2024 06:31 AM
புவனகிரி : புவனகிரி அடுத்த சித்தேரி சப்த கன்னியர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.புவனகிரி அடுத்த சித்தேரி கிராமத்தில் சப்த கன்னியர் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனை முன்னிட்டு கடந்த 10 ம் தேதி மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், யாகசாலை மண்டப பூஜையும் துவங்கியது.இரவு 9.00 மணிக்கு மகாபூர்ணாஹுதி, மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை இரண்டாம் யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுக்கு பின் கடம் புறப்பாடாகி காலை 10:10 மணிக்கு சப்த கன்னியர் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.