தடையை மீறி கும்பாபிேஷக ஏற்பாடு ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே தடையை மீறி ஒரு தரப்பினர் கும்பாபிேஷக ஏற்பாடு செய்வதால் பரபரப்பு நிலவுகிறது. ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ராமாபுரம் ஊராட்சி, பக்கிரிமானியம் கிராமம் மகா மாரியம்மன் கோவிலில் நாளை 13ம் தேதி கும்பாபிேஷகம் நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை முன்னிட்டு இன்று (12ம் தேதி) யாக சாலை பூஜைகள் துவங்க உள்ளது. இந்நிலையில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த கலைமணி, ஜெய்சங்கர் ஆகியோர் இடையே கும்பாபிேஷகத்தின் போது, மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உள்ளதாக ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக கடந்த 8ம் தேதி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளஞ்சூரியன் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் இருதரப்பினர் பங்கேற்றனர். கூட்டத்தில், உடன்பாடு ஏற்படாததால் கும்பாபிேஷகம் நடத்த தாசில்தார் இளஞ்சூரியன் தடை விதித்தார். இந்நிலையில், கிராமத்தில் ஒரு தரப்பினர், தடையை மீறி கும்பாபிேஷக பணிகளை செய்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.