கடலுார்: அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் ரூ.110 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கடலுார், டவுன்ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் பங்கேற்று 13ஆயிரத்து 736 பயனாளிகளுக்கு 110 கோடியே 19லட்ச ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் வாயிலாக 1,459 ரேஷன்கடைகள் மூலம் 7லட்சத்து 97ஆயிரத்து 899 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. புதியதாக 16 முழு நேர கடைகளும், 41 பகுதி நேர கடைகளும் துவங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியின் படி, பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில், 5 சவரனுக்குட்பட்ட 26,022 பயனாளிகள், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் 88, 893 விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி திட்டத்தில் 50,720 மகளிர் என 831 கோடியே 79 லட்ச ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் கணேசன் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை சார்பில் மாவட்டத்தில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறுவணிகக் கடன், மாற்றுத்திறனாளி கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன் என பல்வேறு கடனுதவி, 10,03,410 பயனாளிகளுக்கு ரூ.7,987.33 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.1 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துணைமேயர் தாமரைச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சொர்ணலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.