| ADDED : டிச 03, 2025 06:29 AM
கடலுார்: தொழுதுார் அருகே கொத்தடிமையாக வேலை செய்து வரும் மகன்களை மீட்டு தரக்கோரி, சிறுவர்களின் தாய் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரைச் சேர்ந்தவர் சேகர் மனைவி பூஞ்சோலை,35. பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகன் கதிர், 12, தங்கை மகன் மதன், 13, ஆகியோர் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். கடந்த, 2024ல் தொழுதுார் அருகிலுள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்த ஆட்டுப்பண்ணையில் சிறுவர்களை பெற்றோர் வேலைக்கு அனுப்பினர். அதற்காக ஆட்டுப்பண்ணை உரிமையாளரிடம், 48 ஆயிரம் முன் பணம் பெற்றனர். சிறுவர்கள் கடந்த 20 மாதங்களாக ஆடு மேய்க்கும் வேலை செய்கின்றனர். இந்நிலையில், கடந்த 26ம் தேதி ஆட்டுப்பண்ணையிலிருந்து சிறுவர்கள் இருவரும் தப்பி வந்து விட்டனர். இதனால் ஆட்டுப்பண்ணை உரிமையாளர் பணத்தைக் கேட்டு மிரட்டி வந்தார். இந்நிலையில் கடந்த, 1ம் தேதி இரண்டு சிறுவர்களையும் ஆட்டுப்பண்ணை உரிமையாளர் அடியாட்களுடன் வந்து கடத்திச்சென்றுவிட்டார். அவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.