கடலுார் : லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் பிரதான கட்சி வேட்பாளர்கள் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டந்தோறும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம் ஆகிய 2 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., விஷ்ணு பிரசாத், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சிவக்கொழுந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சியில் மணிவாசகன் மற்றும் சுயேட்சைகள் என, மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.சிதம்பரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ஜ., வில் கார்த்தியாயினி மற்றும் சுயேட்சைகள் என, மொத்தம் 14 பேர் களத்தில் உள்ளனர்.தேர்தலுக்கு இன்றும் 3 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் வி.சி.,கட்சித் தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் முத்தரசன், மா.கம்யூ., மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி, பா.ஜ., கார்த்தியாயினியை ஆதரித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமன், தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா, மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தனர்.கடலுார் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை அதிரித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தே.மு.தி.க.,பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். கடலுார் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். சிதம்பரம் மற்றும் கடலுார் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜூனகார்கே, இந்திய கம்யூ., மாநிலத் தலைவர் முத்தரசன், மா.கம்யூ., மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் பிரசாரம் செய்தனர். மாவட்டத்தில் பிரசாரம் நாளை (17ம் தேதி) மாலை 5:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் பிரசாரம் முடிந்த நிலையில், கடலுார் மற்றும் சிதம்பரம் தொகுதியில் வேட்பாளர்களை ஆதரித்து, இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறுதி் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.