| ADDED : டிச 21, 2025 05:58 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே, மயானத்திற்கு செல்ல சாலை இல்லாததால் சேற்றில் சடலத்தை சுமந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். புவனகிரி தாலுகா மிராளூர் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வாண்டையாங்குப்பம் கிராமத்தில், 700 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் உயிரிழந்தால், வெள்ளாற்றங்கரையில், கடந்த பல ஆண்டுகளாக அடக்கம் செய்து வருகின்றனர். தற்போது வரை சடலங்களை அடக்கம் செய்ய, அரசு சார்பில் கொட்டகை எதுவும் அமைத்து தரப்படவில்லை. அதேபோல, இந்த மயானத்திற்கு செல்ல, பல ஆண்டுகளாக பாதை இல்லை. இதனால் தனி நபர்களுக்கு சொந்தமான விளை நிலங்கள் வழியாக சென்று சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த கிராமத்தில் நேற்று மலர்கொடி, 70; என்பவர் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் அவரது சடலத்தை, சேற்றில் சுமந்து சென்று, அடக்கம் செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது: கடந்த, 2013 ஆம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின், 100 நாள் சம்பளத்தில் மயான சாலை அமைப்பதற்கு தலா ரூபாய் 200 வீதம் வசூல் செய்தது. பலமுறை ஊராட்சியில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.