கடலுார்: கடலுார், முதுநகர் கடலில் பால் ஊற்றி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தோனேஷியாவின், சுமத்ரா தீவில் கடந்த, 2004ம் ஆண்டு டிச.26 ம் தேதி கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலை தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கியது. கடலுார் மாவட்டத்தில் சுனாமி பேரலையில் சிக்கி, 610 பேர் பலியாகினர். இந்நிலையில், மாவட்டத்தில், 21ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலுார், முதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் மாவட்ட தலைவர் சுப்ராயன் தலைமையில் அமைதி பேரணி துவங்கி சிங்காரத்தோப்பு கடற்கரைக்கு வந்தது. பின், கடற்கரையில், மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். மாநில துணை தலைவர் நாராயணன், அனைத்து பொது நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரவி, சட்ட ஆலோசகர் திருமார்பன், மாலை மணி, கோகிலன், வீரமுத்து, கந்தன் மற்றும் சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, தைக்கால்தோணித்துறை, சலங்குகார கிராமம், கிஞ்சம்பேட்டை மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர்.