கடலுார்: கடலுார் அருகே பட்டா மாற்றம் செய்ய, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனு, 43; விவசாயி. இவர், தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, கடந்த மாதம் ஆன்லைனில் விண்ணப்பித்தார். பின்னர், பட்டா மாற்றத்திற்காக மதலப்பட்டு வி.ஏ.ஓ., பிரபாகரனை அணுகினார்.அப்போது, விவசாயி சீனுவிடம், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக வி.ஏ.ஓ., பிரபாகரன் கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என சீனு கூறியதால், 40 ஆயிரத்திற்கு இறங்கி வந்துள்ளார்.லஞ்சம் தர விரும்பாத சீனு, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்பேரில், ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரூபாயை வி.ஏ.ஓ., பிரபாகரனை அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் சந்தித்து சீனு கொடுத்தார்.அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிபுத்துறை ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், அன்பழகன், சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் வி.ஏ.ஓ., பிரபாகரனை கைது செய்தனர்.கடலுார் தாசில்தார் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விவசாயி சீனு பட்டா மாற்றத்திற்கு கொடுத்த மனு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர், வி.ஏ.ஓ., பிரபாகரன் மீது வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.