விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை எம்.எல்.ஏ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தனர். விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் உள்ள விருத்தாசலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி உட்பட 317 ஓட்டுச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு திருத்த முகாமை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க., முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பெண்கள் பள்ளி, தொரவளூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முகாமை பார்வையிட்டார். அ.தி.மு.க., நகர செயலாளர், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில இணை செயலாளர் அருளழகன், நிர்வாகிகள் மணிவண்ணன், ராமச்சந்திரன், பன்னீர்செல்வம், அண்ணாமலை உடனிருந்தனர். இதேபோல், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை, டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி ஆய்வு செய்தார். அப்போது, சிறப்பு திருத்த முகாமில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தாசில்தார் அரவிந்தன், தேர்தல் துணை தாசில்தார் வேல்முருகன், வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், கணினி இயக்குனர் சுரேஷ் உடனிருந்தனர்.