| ADDED : நவ 20, 2025 05:45 AM
கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக பாரா விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2024ம் ஆண்டு பாரீஸில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதிக்கு, 2 கோடி ரூபாய், வெண்கல பதக்கம் வென்ற நித்யஸ்ரீ, மனிஷா மற்றும் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் ஆகியோருக்கு தலா, 1 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்க நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பிரத்யேக விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என துணைமுதல்வர் உதயநிதி அறிவித்தார். அதன்படி நடப்பாண்டில் திருச்சி, மதுரை, கடலுார், திருநெல்வேலி, சேலம் ஆகிய, 5 மாவட்டங்களில் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பாரா விளையாட்டு அரங்கம் கட்டும் பணி துவங்கியது. கட்டி முடிக்கப்பட்ட விளையாட்டு அரங்கங்களை, கடந்த ஆக.14ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கடலுாரில் கட்டி முடிக்கப்பட்ட விளையாட்டு அரங்கமும், அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. ஆனாலும், பணியாளர்கள் நியமிக்கப்படாததால், பாரா விளையாட்டு அரங்கம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பாரா விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான பிரத்யேக மைதானம் பயன்பாடின்றி வீணாகும் அவலநிலை காணப்படுகிறது. பாரா விளையாட்டுகளிலும் வீரர்கள் சாதிக்க, விளையாட்டு அரங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.