கடலுார்: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுாரில், குறைகேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., புண்ணிகோட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் (விவசாயம்), வேளாண் இணை இயக்குனர் லட்சுமிகாந்தன், இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் குஞ்சிதபாதம், சிவசக்திவேல், பாலமுருகன், மாதவன், ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசியதாவது: எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியில் களப்பணியாளர்களை நியமிக்க வேண்டும். நெடுஞ்சேரி, காவானுார் ஏரியை துார்வார வேண்டும். வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் செங்கால் ஓடையை துார்வார வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் காவிரி டெல்டா பகுதியில், 13 கிராமங்கள் விடுபட்டுள்ளன. இந்த கிராமங்களை காவிரி டெல்டா பகுதியில் இணைக்க வேண்டும். செப்., மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் . தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் முறையாக பழைய முறையில் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் விடுபடாமல் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஊக்கத் தொகை, 349 ரூபாயை உடனே வழங்க வேண்டும். மலையடிகுப்பத்தில், 100 ஆண்டு பயிர் செய்த விவசாயிகளுக்கு முதல்வர், தரிசு மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கி நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். கேப்பர் மலையை பாதுகாக்க காலணி தொழிற்சாலையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். கொண்டங்கி ஏரி மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும். கடலுார் மாவட்ட காவிரி பாசன பகுதிகளில், 11 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் மாதம் அறுவடை பணி துவங்கியுள்ளது. அறுவடை பணிக்கு தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அறுவடை செய்த நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். கடலுார் மாவட்ட காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆண்டுக்கு, ரூ.90 கோடி வருமானம் ஈட்டக்கூடிய உளுந்து பயிறு சாகுபடியை ஊக்குவிக்க, நெல் அறுவடை முடிந்து ஒரு முறை சீராக தண்ணீர் வினியோகம் செய்து, உளுந்து பயிர் சாகுபடி செய்வதற்கான நடைமுறையை நடப்பாண்டில் உருவாக்க வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிய வேண்டியுள்ளது. சாலைக்கு அருகில் பாசன வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். வருவாய்த் துறையில் கீழ்மட்ட சில அதிகாரிகள் குறிப்பாக உதவி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் தவறான நில மோசடியில் ஈடுபட்டு பட்டா மாற்றம் செய்து வருவது ஏற்புடையதல்ல. இதற்கு நிவாரணம் தேடி விவசாயிகள் சென்றால் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மிகப்பெரிய அளவில் நில மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் தற்போது யூரியா 5,388 மெட்ரிக் டன்; டி.ஏ.பி 1,254 மெட்ரிக் டன்; பொட்டாஷ் 1,683 மெட்ரிக் டன்; காம்ப்லக்ஸ் 6,144 மெட்ரிக் டன்; சூப்பர் பாஸ்பேட் 1,509 மெட்ரிக் டன்; என மொத்தம் 16,013 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. கடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், 133 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 108 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாயிகளால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, இணை இயக்குநர் லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, கதிரேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சொர்ணலட்சுமி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் வட்டாரங்களின் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.