அரூர்: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை பெண்கள் பங்கேற்ற, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவரும், ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தர்மபுரி ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரன் செய்திருந்தார்.* தர்மபுரி விருப்பட்சிபுரத்திலுள்ள, உடுப்பி பூர்த்திகே மடத்தின் கிளையான ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், 108 தீபங்கள் ஏற்றி ஜெயராம், ஜெயராம், ஜெய, ஜெய ஸ்ரீராம் மந்திரம், 108 முறை ஜெபித்து பக்தர்கள் ராமரை வழிபட்டனர். பின், அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர் படத்துக்கு மலர்கள் துாவி அர்ச்சனை செய்தனர். நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைகோட்டையில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி, கடத்துார், பா.ஜ., கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய தலைவர் சிற்றரசு தலைமையில், கல்யாண ராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கல்யாணராமருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர் சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இராமியம்பட்டி கல்யாண ராமர் கோவில், மாரியம்மன கோவில், தாதனுார்புதுார், டி.துரிஞ்சிப்பட்டி சிந்தல்பாடி, கந்தகவுண்டனுார், ஆகிய கிராமங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட நிர்வாகிகள் பூபாலன், சுமதி, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டிலுள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் சார்பில், பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடத்துார் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு யாகம் பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. பொம்மிடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கோவில்களில் சிறப்பு பூஜை அன்னதானம் நடந்தது.* அரூர் பொதுப்பணித்துறை குடியிருப்பிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், பா.ஜ., சார்பில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, பா.ஜ., நகர தலைவர் ஜெயக்குமார் வெங்கட்ராஜ் தலைமையில், அக்கட்சியினர் வழிபாடு நடத்தினர். பின், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.