உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாக்கடை கழிவுகள் கலக்கும் ராமக்கா ஏரி

சாக்கடை கழிவுகள் கலக்கும் ராமக்கா ஏரி

தர்மபுரி : தர்மபுரி ராமக்கா ஏரியில் சாக்கடை கழிவுகள் கலப்பதால், நீர் மாசடைந்து வருகிறது. தீனிக்காக கொங்கு, நாரை, நீர் கோழிகள் வருகை அதிகரித்துள்ளது. தர்மபுரி நகரின் நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்துக்கு அடிப்படையாக ராமக்கா ஏரியுள்ளது. இந்த ஏரியின் மூலம் தர்மபுரி, மதிக்கோன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெற்று வருகிறது. ஏரியில் நீர் செழிப்புறும் காலங்களில் நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் ஏரி பாசன பகுதியில் செழிப்பாக இருக்கும். ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை அடிப்படையாக கொண்டு ஏரியில் நீர் சேமிக்கப்பட்டு வருகிறது. பஞ்சப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் பாலக்கோடு தாலுகாவில் உள்ள, 20க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பிய பின், அங்கிருந்து ராமக்கா ஏரிக்கு தண்ணீர் வரும். பஞ்சப்பள்ளி அணையில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால், அந்த தண்ணீர் டிசம்பர், ஜனவரியில் தான் ராமக்கா ஏரிக்கு வரும். தென் மேற்கு பருவமழை காலங்களில் நகரப்பகுதியில் மற்றும் நீர் வழித்தட பாதைகளில் பெய்யும் மழையும் ஏரியின் நீர் சேமிப்புக்கு உதவியாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டாய் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு காரணமாக ராமக்கா ஏரிக்கு வரும் தண்ணீர் குறைய துவங்கியுள்ளது.தர்மபுரி நகரம் மற்றும் மதிக்கோன்பாளையம் பகுதியில் சேரும் சாக்கடை கழிவுகள் முழுக்க, முழுக்க ராமக்கா ஏரியில் கலந்து வருகிறது. மழைக்காலங்களில் நகரப்பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகள் அனைத்தும் மழைநீர் அடித்து வரப்பட்டு ஏரியில் சேர்க்கிறது. சாக்கடை கழிவுகள் சேர்வதால், ஏரியில் தண்ணீர் இருக்கும் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, ஏரியில், 35 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் தேங்கிய நிலையில், சாக்கடை கழிவுகள் கலப்பதால், நீர் மாசுபட்டு பச்சை நிறமாக மாறி விட்டது. ஏரியில் மீன் பிடி தொழிலுக்காக ஏரளாமான மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன் பிடிப்பு தொழில் நடந்து வருகிறது. ஏரியில் சேமிக்கப்பட்டுள்ள நீரை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கொக்கு, நாரை, நீர் கோழிகள் அதிக அளவில் ராமக்கா ஏரியில் வலம் வரத்துவங்கியுள்ளது. சாக்கடை கழிவுகளில் உற்பத்தியாகும் புழு, பூச்சிகள், மீன் குஞ்சுகள் அதிகம் இருப்பதால், தீனிக்காக கொக்கு உள்ளிட்ட பறவை இனங்கள் அதிகம் வரத்துவங்கியுள்ளது. ஏரியின் உள்ளே உள்ள மரங்களில் தஞ்சம் அடையும் பறவை இனங்கள், ஏரியில் இறங்கி பசியை போக்கி வருகிறது. நீர் கோழிகள் அதிக எண்ணிக்கையில் ஏரி நீரில் வலம் வருகின்றன. தீனிகள் அதிகம் கிடைப்பதால், கடந்த சில மாதங்களாக கொக்கு, நாரை உள்ளிட்ட பறவை இனங்கள் ஏரியை நோக்கி வரத்துவங்கியுள்ளது.

இறைச்சி கழிவுகள்: ஏரியில் சாக்கடை நீர் ஒருபக்கம் மாசுப்படுத்துவதோடு, நகரின் பல்வேறு பகுதியில் இருந்து இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால், தண்ணீர் துர்நாற்றம் அடித்து வருகிறது. நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவுக்கு வந்தால் மட்டுமே ஏரியில் சாக்கடை நீர் கலப்பதை முழுமையாக தடுக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ