| ADDED : ஜூன் 22, 2024 12:32 AM
தர்மபுரி : சத்துணவு ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அனுசுயா வரவேற்றார். மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் ராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், 40 ஆண்டுகளாக, நிரந்தரமாக செயல்படுத்தும் சத்துணவு திட்டத்தில், பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். இதில் அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை, 5 லட்சம் ரூபாய், சமையல் உதவியாளர்களுக்கு பணிக்கொடை, 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை, முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர், ஜாக்டோ ஜியோ மாவட்ட பொருளாளர் புகழேந்தி ஆகியோர் பேசினர்.