அரூர்: நீச்சல் போட்டியில் சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர், அரசின் உதவிக்காக காத்திருக்கிறார். தர்மபுரி மாவட்டம், தாசரஹள்ளியை சேர்ந்த குமரவேல் -- சவுமியா தம்பதியின் மகன் கார்த்திகேயன், 14; முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புக்கு கீழ் செயல்பட முடியாத, நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி. இவர், அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார். இரு ஆண்டுகளாக நீ ச்சல் பயிற்சி பெற்று, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார். தேனி, புதுக்கோட்டை, கோவை மற்றும் தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில், சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், அக்., 25ல் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார். அதில், 50 மீ., பிரிவில், ப்ரீ ஸ்டைல் பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 100 மீ., பிரிவில் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் என, மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஹைதராபாதில் நவ., 15 முதல், 18 வரை நடந்த தேசிய அளவிலான போட்டியில், 50 மீ., பிரிவில், ப்ரீ ஸ்டைல் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார். கார்த்திகேயன் தாய் சவுமியா கூறியதாவது: என் மகன், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதற்கு , போக்குவரத்து செலவு, உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்கு அதிகளவில் பணம் வேண்டியுள்ளது. அரசின் சார்பில் ஊக்கத்தொகை கிடைத்தால், போட்டிகளில் பங்கேற்க எளிதாக இருக்கும். யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். முதல்வர், துணை முதல்வரின் ஆதரவு கிடைத்தால், பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியும். இவ்வாறு கூறினார். இவருக்கு உதவ விருப்பமுள்ளவர்கள், 90031 03753 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.