| ADDED : நவ 23, 2025 01:14 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, நீர்நிலைகளில் கொட்டப்பட்ட குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி அடுத்துள்ள உங்கராணஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எட்டிமரத்துப்பட்டி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு ஆகியவை உள்ளது.இந்நிலையில், எட்டிமரத்துபட்டியில் பஞ்., நிர்வாகம் சார்பில், சேகரிக்கப்படும் குப்பை முறையாக அப்புறப்படுத்தாமல், அருகிலுள்ள நீரோடைகள், குட்டைகள் உட்பட நீர்நிலைகளில் கொட்டபட்டு வருகிறது. இதன் காரணமாக, நீர்நிலைகள் மாசடைவதுடன், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்.,களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பையை முறையாக அப்புறப்படுத்தி, நீர்நிலைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க, வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.