| ADDED : ஜூலை 09, 2024 06:03 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்திலுள்ள, அரசு பள்ளி மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை பெற, அவர்களின் ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக் வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், ஆதார் கார்டு பதிவு செய்ய அதிகாலை, 4:00 மணி முதல் ஆதார் மையங்களில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் காத்துக் கிடக்கின்றனர். கடந்த ஒருவாரமாக ஆதார் கார்டு எடுக்க முடியாமல் தவித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். ஊத்தங்கரையில் தாசில்தார் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், இந்தியன் பேங்க் மற்றும் பள்ளிகளில் சென்று ஆதார் எடுக்க, 2 மையங்கள் என மொத்தம், 5 மையங்கள் உள்ளன. ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் உள்ளதை தவிர, மற்றவற்றில் சரியாக ஆதார் கார்டு பதிவு பணி நடப்பதில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் குவிவதால், ஆதார் எடுக்கும் பணியாளர்கள் திணறுகின்றனர். 5 வயதுக்கு மேலுள்ள மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கும் பணியால் கூட்டம் அலைமோதுகிறது. அரசு பள்ளிகளில், ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம் அமைத்து கொடுக்கவும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்கவும், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.