பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. உதவி பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் முதல்வர் அன்பரசி, 'கல்வி கரையில்' என்ற தலைப்பிலும், அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், 'இலக்கும் வெற்றியும் நம் கையில்' எனும் தலைப்பிலும், சேலம் பி.எஸ்.என்.எல்., முதன்மை இயக்குனர் கோபிநாத், 'கையருகில் வானம்' என்ற தலைப்பிலும் பேசினர்.அவர்கள் பேசுகையில், அரசு பள்ளியில், அரசு கல்லுாரியில் பயின்றாலும், அரசு ஊழியராகவும், வெற்றியாளராகவும் வர முடியும் என்பதற்கு, சேலம் அரசு கல்லுாரியில் பயின்ற மூவருமே சிறந்த நிகழ்கால உதாரணங்கள். தனக்கான இலக்கை நிர்ணயித்து, கடின உழைப்போடு முயற்சித்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஏன் என்ற கேள்வியை கேளுங்கள், அதுவே வெற்றியாளராக முதல் தகுதி. அரசு பல்வேறு திட்டங்கள் வாயிலாக, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதை நன்கு பயன்படுத்தி, மாணவர்களும் நாளைய தொழில் முனைவோர்களாக பிரகாசிக்க முடியும். மாணவர்கள் பாட அறிவோடு, தங்களுக்கான மொழி ஆளுமை திறன்களையும், வளர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணம், சொல், செயல், ஆகிய மூன்றும், ஒரே புள்ளியில் இருந்தால், வெற்றி வசமாகும் என பேசினர். நுாலகர் கல்யாணி நன்றி கூறினார். மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.