தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால், நீர்நிலைகள் நீரின்றி வறண்டு வருகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக நீர்நிலை ஆதாரங்களாக சின்னாறு, தொப்பையாறு, வாணியாறு உள்ளிட்ட, 8 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் வாணியாறு மற்றும் சின்னாறு அணைகளை மட்டும் கடந்தாண்டு நீர் நிரம்பி, தற்போது பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மற்ற அணைகளில் குறைந்தளவிலேயே நீர்இருப்பு உள்ளது. குறைந்த மழைதர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறிய அளவிலான நீர் நிலைகள், 512, பெரிய அளவிலான ஏரிகள், 74 என, 586 நீர் நிலைகள் உள்ளன. இதில், 2021- - 2022 ஆண்டுகளில் மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு விட அதிகமாக பெய்ததால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைத்தது. ஆனால், கடந்தாண்டு பருவமழை சராசரி மழை அளவை விட குறைவாக பெய்ததால், நீர்நிலைகள் வறண்டு வருகிறது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், 2021ல், 392 மி.மீ., அளவிற்கு மழை பதிவானது. 2022ல், 576 மி.மீ., மற்றும் 2023ல், 302 மி.மீ., மழை பதிவானது. அதேபோல் வடகிழக்கு பருவமழை காலத்தில், 2021ல் - 477; 2022ல் - 364; 2023 - 156 மி.மீ., அளவிற்கு மட்டுமே மழை பதிவானது. மேலும், ஆண்டில் சராசரியாக தர்மபுரி மாவட்டத்தில், 853 மி.மீ., பெய்யும் மழையை விட குறைந்து, 586 மி.மீ., மட்டுமே, கடந்தாண்டு பெய்துள்ளது.நீர்வழித்தட ஆக்கிரமிப்புமாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் முறையாக அகற்றாததால், அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால், மாவட்டத்தில் அதிகளவு மழைப்பொழிவு இருந்தாலும், நீரை தேக்கி வைக்க முடியாத நிலைதான் உள்ளது. குடி மராமரத்து பணி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் ஏரி, வாய்க்கால்களில் துார்வாரும் பணி பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால், ஏரிகள் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வருவதற்காக எந்தவித சாத்தியக்கூறுகளும் இல்லை. வருடத்தின் சராசரி மழை கூட, தர்மபுரி மாவட்டத்தில் தேக்கி வைக்க முடிவதில்லை.கடும் தட்டுப்பாடுவழக்கம்போல கோடைக்காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்டவை தொடர்ந்து ஏற்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போதைய சூழ்நிலையில், பல நீர்நிலைகள் நீரின்றி வறண்டு வருகின்றன. இதனால், வரும் கோடைக்காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.