கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே, சென்னானுார் அகழாய்வு பணி நேற்று துவங்கியது.தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பானைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலுார் மாவட்டம் மருங்கூர் ஆகிய, 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என, சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று, கீழடி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய, 2 அகழாய்வு தளங்களில் தொல்லியல் அகழாய்வை காணொலி காட்சி மூலம், தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா சென்னானுாரில் அகழாய்வு பணிகளை கலெக்டர் சரயு துவக்கி வைத்து, அங்கு ஏற்கனவே கிடைத்த பழங்கால பொருட்களை பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர் சரயு கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா சென்னானுார் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவில் பழங்கால பானையோடுகள் அதிகம் உள்ளன. இப்பகுதி அண்மையில், தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்ட மயிலாடும்பாறையை போன்று உள்ளது. இங்கும், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தை சேர்ந்த கறுப்பு, சிவப்பு பானையோடுகள், இரும்பு கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான சங்க காலத்தை சேர்ந்த செங்கற்கள் அதிகளவில் உள்ளன. ஒரு கிணற்றின் பக்கம் முழுவதும், 100 பழங்கால செங்கற்களை கொண்டு சமீபத்தில் சுவர் எழுப்பியுள்ளனர். நிலத்தின் அடியிலும், இந்த செங்கற்கள் வரிசையாக இருப்பதாக ஊர்மக்கள் கூறினர். இந்த செங்கற்கள், 2,000 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம், இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. சென்னானுார் பகுதியில், 8 மற்றும், 9ம் நுாற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்தோடு கூடிய நடுகற்கள் மற்றும், 17ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் கிடைத்துள்ளன. இப்பகுதியில், 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ துவங்கி இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அதற்கான தொல்லியல் சான்றுகளை இப்பகுதி கொண்டுள்ளதால், தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு மேற்கொள்ளப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி சென்னானுாரில் அகழாய்வு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய கற்கால வாழ்விட பகுதியாக இந்த இடம் இருந்துள்ளதால், அதற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, சென்னானுார் அகழாய்வு இயக்குனர் பரந்தாமன் கூறுகையில், ''இந்த அகழாய்வு, அடுத்தாண்டு மே மாதம் வரை நடக்க உள்ளது. இங்கு புதிய கற்காலத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு ஆகியவற்றிற்கான சான்றுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது,'' என்றார்.இதில், அகழாய்வு பொறுப்பாளர் வெங்கட குரு பிரசன்னா, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வாளர் சுகவனம் முருகன், வரலாற்று ஆய்வு குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.