கோடைகால தீ தடுப்பு
பாதுகாப்பு விழிப்புணர்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, எம்.ஜி.ரோடு பகுதியில், தனியார் துணிக்கடை முன், தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் செல்வம், சிறப்பு நிலை அலுவலர் மகேந்திரன் ஆகியோர் கோடை காலங்களில் ஏற்படும் திடீர் தீ விபத்து, சமையலறையில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்படும் தீ விபத்து, மின்கசிவால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, செயல் விளக்கத்துடன் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விபத்து ஏற்படுத்திய
டிராக்டர் டிரைவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அமரேசன், 35, பைக் மெக்கானிக்; இவர் கடந்த, 28ல், 7:00 மணியளவில் கவுண்டம்பட்டியிலிருந்து தோளனுார் செல்லும்போது எதிரே வந்த டிராக்டர் மோதி பலியானார். இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரித்து வந்தனர். அமரேசனின் உறவினர்கள், விபத்துக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்யக்கோரி, அமரேசனின் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் விபத்துக்கு காரணமாண டிராக்டர் டிரைவரான கலசப்பாடி கருக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ், 32, என்பவரை ஏ.பள்ளிப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து நேற்றிரவு, 7:00 மணியளவில் அமரேசன் உடலை, உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.மண் கடத்திய லாரி பறிமுதல்
பெரும்பாலை: புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி ஆர்.ஐ., அருணகிரி, 50; இவர் கடந்த, 29 அன்று சின்னம்பள்ளி - தர்மபுரி ரோட்டில் ஆர்.ஆர்.அள்ளி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, அதன் ஓட்டுனர் தப்பி ஓடினார். லாரியை சோதனை செய்தபோது, அதில் ஒரு யூனிட் மண் கடத்தியது தெரியவந்தது. டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்க, பெரும்பாலை போலீஸில் அவர் புகார் அளித்தார். 37 வருடம் பணியாற்றிய
போலீசாருக்கு பாராட்டு
தர்மபுரி: காவல் துறையில், 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற, 4 எஸ்.ஐ., ஒரு எஸ்.எஸ்.ஐ., உட்பட, 5 பேரை, மாவட்ட எஸ்.பி., பாராட்டி கவுரவித்தார்.தர்மபுரி மாவட்ட காவல்துறையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய சென்றாயன், செல்வராஜ், முனிராஜ், ராஜா மற்றும் எஸ்.எஸ்.ஐ., ஸ்ரீராமலு ஆகியோர் நேற்று பணி நிறைவு பெற்றனர். இந்நிலையில் போலீசில், 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.