அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதியளவில் பெய்யவில்லை. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அணைகள், தடுப்பணைகள், ஏரி, குளம் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுள்ளன. ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிர்களான பாக்கு, வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் பூ வகை செடிகள் கருகி வருகின்றன. மேலும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.அதேபோல், வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியினால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயில், வெப்பக்காற்றால், மக்கள் அவதிப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பின், அரூரில் நேற்று மதியம், 3:50 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. பின், சிறிது நேரத்திலேயே, 4:05 மணிக்கு மழை நின்றது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில் சிறிது நேரம் பெய்த சாரல்மழையால், விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றமடைந்தனர்.