உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / -கழிவுகளின் கிட்டங்கியாய் உருமாறிய தர்மதெப்பக்குளம்

-கழிவுகளின் கிட்டங்கியாய் உருமாறிய தர்மதெப்பக்குளம்

சின்னாளபட்டி : எல்லை பிரச்னையால் பராமரிப்பில் கைகழுவப்பட்ட சின்னாளபட்டி தர்மதெப்பக்குளம் (உடையன்குளம், ராணி மங்கம்மாள் குளம்) பராமரிப்பின்றி துார்ந்துள்ளது. இதோடு ஆக்கிரமிப்பு, கழிவுகள், கட்டட இடிபாடுகளை குவித்தல் என நீராதாரத்தின் பொலிவை இழந்துள்ளது.திண்டுக்கல் -மதுரை ரோட்டில் சின்னாளபட்டி விலக்கு அருகே உள்ள இக்குளம் ஒரு ஏக்கர் 46 சென்ட் பரப்பளவில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உருவாக்கப்பட்டது. தற்போது சின்னாளபட்டி பேரூராட்சியில் ஆத்துார் நீர்தேக்கம், நிலக்கோட்டை பேரணை குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இவை தவிர பிற குடியிருப்புகள், காந்திகிராம ஊராட்சி பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளின் ஆழ்துளை கிணற்று நிலத்தடி நீராதாரமாக இக்கண்மாய் இருந்தது. பேரூராட்சி, ஊராட்சி எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் இதனை பராமரிப்பதில் பல ஆண்டுகளாக அலட்சியம் நீடிக்கிறது. பராமரிப்பு நடவடிக்கைகள் பெயரளவில் கூட இல்லாமல் கிடப்பில் விடப்பட்டு உள்ளது. அவ்வப்போது ஊராட்சி சார்பில் வேலை உறுதி திட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும் துார் வாருதல், கரை பலப்படுத்தல் பணி நடக்கவில்லை.இக்குளத்து நீரை ஆதாரமாக கொண்டு 1972ல் தி.மு.க., ஆட்சியின்போது சலவை தொழிலாளர்களுக்காக இதன் கரைப்பகுதியில் சலவைத்துறை கட்டி கொடுக்கப்பட்டது. சின்னாளபட்டி, சாமியார்பட்டி, அம்பாத்துறை, ஜே.புதுக்கோட்டை, செட்டியபட்டி உட்பட 10க்கு மேற்பட்ட சுற்று கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். அடுத்தடுத்து கண்மாயின் பெருமளவு பகுதிகள், நீர் வரத்து வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் மூடப்பட்டன. அசுத்த நீர் மட்டுமின்றி குடியிருப்பு,வணிக நிறுவனம், மருத்துவமனை கழிவுகள் குவிய துவங்கியது. இப்பிரச்னைகளால் துாய்மை தன்மை மாறியதோடு தண்ணீர் வரத்தின்றி துார்ந்தும் கிடக்கிறது.இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதித்துள்ளது. பெருமளவு பகுதிகளில் புதர்ச்செடிகள் மண்டி கிடக்க விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.இதனை பராமரிப்பதில் வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம் நீடிக்கிறது. இதில் தொய்வு நீடிப்பதால் இப்பகுதி சுகாதாரக்கேட்டின் உச்ச நிலையை அடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம்தான் கண்மாயை மேம்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பு தாராளம்

ஜெயராஜ்,ஏ.டி.எஸ்., நகர் குடியிருப்போர் சங்க முன்னாள் தலைவர், சின்னாளபட்டி : ஏ.டி.எஸ்., நகர் குடியிருப்போரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இக்கண்மாய் இருந்து வருகிறது. இது மட்டுமின்றி பிருந்தாவனத்தோப்பு ராம அழகர் கோயில் கிணற்றின் தண்ணீர் ஆதாரமாகவும் உள்ளது. அம்பாத்துறையில் இருந்து நான்கு வழிச்சாலை ஓரத்தில் வாய்க்கால் அமைந்துள்ளனர். இவை முறையாக பராமரிப்பதோ, துார் வாருவதோ இல்லை. மழை நீர் முழுமையாக தடைப் பட்டுள்ளது. இக்கண்மாயின் நீர் வரத்து பகுதிகள் முழுமையாக துார்ந்து கிடக்கிறது. இப்பகுதி வணிக நிறுவனங்கள், வரத்து வழித்தடத்தில் விறகு, கழிவுகளை குவிக்கின்றனர். மொத்த பரப்பளவில் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்ய கண்மாயின் பரப்பளவு குறைந்து வருகிறது. சுற்றிய குடியிருப்புவாசிகள் இங்கு குப்பை குவிக்கும் அவல நிலை உள்ளது. கண்மாயை துார் வாரி பல ஆண்டுகளான நிலையில் புதர் செடிகள் அடர்ந்து கிடக்கிறது.

அதிகாரிகள் அலட்சியம்

பாண்டி, சலவைத்தொழிலாளி, சாமியார்பட்டி : சுற்றுப்புற பகுதிகளுக்கான முக்கிய நிலத்தடி நீராதாரமாக இக்கண்மாய் இருந்தது. குடிநீர் ஆதாரமாக இருந்த பாரம்பரியம் இதற்கு உண்டு. வெளியூர் வியாபாரிகள், விவசாயிகள், இவ்வழியே செல்வோர் என பலர் இங்கு உணவருந்தி ஓய்வெடுக்கும் பகுதியாக இருந்துள்ளது. பராமரிப்பில் அலட்சியத்தால் தற்போது கழிவுகள் குவியும் குட்டையாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. குவிக்கப்படும் குப்பைகளால் துார்ந்துள்ளது. இப்பகுதியில் சலவைத்துறை ஏற்படுத்தி நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு உறுதிப்படுத்தியது. அதன் பின் கண்மாயை பராமரிப்பது சலவைத் துறை மேம்படுத்தல் போன்ற பணிகளில் தொழிலாளர்களின் கோரிக்கை நீடித்த போதும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

சீரமைப்பு தேவை

சண்முகவேல்,தமிழ்நாடு வண்ணார் சமுதாய எழுச்சி நல பேரவை, மாநில செயலாளர், சின்னாளபட்டி : பேரூராட்சி குடியிருப்புகள் மட்டுமின்றி வணிக நிறுவனத்தினர் இப்பகுதியில் கழிவுகளை கொட்டுகின்றனர். இறைச்சி, மருத்துவ கழிவுகளை ரோட்டோரங்களில் குவிக்கின்றனர். இவற்றிற்காக காத்திருக்கும் தெரு நாய்களால் பலர் பாதிப்படைகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் உள்ளிட்டோரை நாய்கள் கடித்து தாக்கும் அவலம் தொடர்கிறது. இங்குள்ள கழிவுகளால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. கொசுத்தொல்லை, விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் இப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர். முறையான தெரு விளக்கு வசதி இப்பகுதியில் இல்லை. இருள் சூழ்ந்த நிலையில் போதிய பாதுகாப்பற்ற சூழலில் நடமாடும் அவலம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை