| ADDED : ஜூன் 01, 2024 05:35 AM
மாவட்டத்தில் திண்டுக்கல், கொடைக்கானல், வத்தலக்குண்டு, சிறுமலை,பழநி, வேடசந்துார், நிலக்கோட்டை,ஆத்துார்,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கும் நிலை உள்ளது. ஆண்களுக்கு 21வயதும்,பெண்களுக்கு 18 வயதும் பூர்த்தியான பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என அரசு விதிகளை வகுத்த போதிலும் சிலர் அதை மதிக்காமல் தாமாக முன்வந்து இதுபோன்ற குழந்தை திருமணங்களை நடத்துகின்றனர். தவறு என்பது தெரிந்தும் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளுக்கு வயது முதிர்ந்த ஆண்களை பெற்றோர்களே திருமணம் செய்து வைப்பது தான் வேதனையான செயலாக உள்ளது. எப்போதாவது அதிகாரிகளுக்கு இதுகுறித்த தகவல்கள் கிடைத்தால் மட்டும் நேரில் சென்று குழந்தை திருமணங்களை தடுக்கின்றனர். தெரியாத திருமணங்கள் பல நடந்து கொண்டு தான் இருக்கிறது.குழந்தை திருமணத்தில் ஈடுபடும் தம்பதியினர் கர்ப்பமுற்ற பின் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக செல்லும் போது டாக்டர்களிடம் சிக்குகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார். இதில் சிக்கும் ஆண்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதுமட்டுமில்லாமல் குழந்தை திருமணத்தில் சிக்கும் சிறுமிகள் பலரும் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இதைத்தடுக்க வேண்டிய அதிகாரிகள் புகார்கள் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்காமல் அடிக்கடி கிராமங்களுக்கு சென்று இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.