திண்டுக்கல் : ''திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 2025ல் அமித்பாரத் திட்டத்தின் ரூ.16 கோடியில் புது முகப்பு,ஓட்டல்,ஓய்வு அறைகள் அமைக்கப்படஉள்ளதாக'' திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஆர்.செந்தில்குமார் தெரிவித்தார். ரயில்வே ஸ்டேஷனில் போதிய குடிநீர் வசதி உள்ளதா...
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் தேவைக்கேற்ப 5 பிளாட்பாரங்களிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளிர்ந்த தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் அதையும் மக்கள் தேவைக்கேற்ப பயன்படுத்துகின்றனர். கூரை வசதி இன்றி மழையில் பயணிகள் நனைகிறார்களே...
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் 80 சதவீதம் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதத்திற்கு கூரைகள் அமைக்க போதிய இடவசதிகள் இல்லை. இருந்தபோதிலும் பயணிகள் மழையில் நனையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறைகள் பலவும் பூட்டியே கிடக்கிறதே...
இங்குள்ள கழிப்பறைகள் 24 மணிநேரமும் 30 துாய்மை பணியாளர்களால் சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்படுகிறது. அடிக்கடி அதிகாரிகளும் கண்காணிக்கிறோம். சுகாதாரக்கேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் பயணிகள் வீசி செல்லும் குப்பையும் உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகிறது. தண்டவாள பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கிறதா...
அடிக்கடி தண்டவாளம் அருகில் வளர்ந்திருக்கும் புற்கள் சுத்தம் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 3,4 வது பிளாட்பாரங்களில் ஜூலை 28 முதல் தண்டவாளத்தில் கூடுதல் வேகத்தில் ரயில்கள் இயக்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகள் தொடங்க உள்ளது. அந்த காலக்கட்டங்களில் ரயில்கள் வழக்கமான பாதையை மாற்றி வேறு பாதையில் செல்லும். அதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும். இனிமேல் 3,4வது பிளாட்பாரங்களில் ரயில்கள் 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. பயணிகளின் ஓய்வு அறை பயன்பாட்டில் இருக்கிறதா...
குளிர்சாதன வசதியுடன் உயர் வகுப்பு,2 ம் கட்ட வகுப்பு என 3 வகையான ஓய்வு அறைகள் உள்ளது. ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அங்கு சென்று ஓய்வெடுக்கின்றனர். குளிர்சாதன அறையில் ஓய்வெடுப்பதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பாதுகாப்பு எந்தளவில் உள்ளது...
ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் 30 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர இன்னும் 60 இடங்களில் கேமராக்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பயணிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளதா...
பயணிகளின் பயன்பாட்டிற்காக மக்கள் மருந்தகம்,ஓட்டல்கள்,கேண்டீன் போன்றவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர 2025ல் அமித்பாரத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் முகப்பு,1 வது பிளாட்பாரத்தில் அலுவலகம்,ஓய்வு அறை உள்ளிட்டவைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது என்றார்.