| ADDED : மே 29, 2024 02:09 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் கலெக்டர் அலுவலக உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் சிக்கிய நிலையில், ஆய்வாளர்கள்,ஊராட்சி அலுவலர்கள் என 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களின் 306 ஊராட்சிகள் வருடாந்திர வரவு செலவு கணக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலக உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தணிக்கை நடக்கும் . இந்தபணிகளை விரைந்து முடிக்க ஊராட்சி பணியாளர்களிடம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ளோர் லஞ்சம் கேட்பதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது.டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு இந்த உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலர்கள் பீரோ அடியில் ,டைப்பிங் இயந்திரம், கால்களுக்கு அடியில் என மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ.1.57 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் நேற்று அதிகாலை 1:00 மணி வரை விசாரித்தனர். இதை தொடர்ந்து உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு ஆய்வாளர்கள் 7 பேர், ஊராட்சி அலுவலர்கள் 8 பேர் என 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.