| ADDED : ஆக 23, 2024 04:54 AM
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே வேம்பூரில் மின்வாரியத்திற்கு ஒதுக்கிய இடம் மயானமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு தடை கோரியும் தாக்கலான வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.வேம்பூர் முருகேசன் தாக்கல் செய்த பொதுநல மனு: வேம்பூர் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு இடத்தை மயானமாக பயன்படுத்தினோம். இதில் மக்களிடையே பாகுபாடு இல்லை. குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள இடம் மின்வாரியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உள்ளூர் அரசியல்வாதிகளின் நிர்பந்தத்தால் மயானமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருகில் குடியிருப்புகள், கோயில் உள்ளன. இறந்தவர்கள் உடல்களை எரிக்கும்போது எழும் புகையால் மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். மக்களிடம் கருத்து கோராமல் தற்போது அந்த இடத்தை மயானமாக பயன்படுத்த வருவாய்த்துறையின் சில அலுவலர்கள் அனுமதித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அங்கு அடக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும். வேம்பூர் வடமேற்கு பகுதியில் உள்ள பழைய மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மின்வாரியத்திற்கு சொந்தமான இடம், மயானத்திற்கு ஒதுக்கிய இடத்தை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். அவருக்கு நில அளவைத்துறை உதவி இயக்குனர் உதவி செய்ய வேண்டும். ஆய்வின்போது யாராவது இடையூறு செய்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது. நீதிபதி செப்.,17 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.