| ADDED : ஜூலை 09, 2024 05:52 AM
திண்டுக்கல்: புகார் பெற போலீசார் லஞ்சம் கேட்பதாக கூறி குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த தம்பதியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 294 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.மீனவர் நலத்துறை சார்பில் மானியத்தில் பரிசல், மீன்பிடி வலைகள் என பல்வேறு துறைகளின் சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ.27.35 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனம், மீன்துறை ஆய்வாளர்கள் இந்துசாரா, ஞானசுந்தரி கலந்துகொண்டனர்.புகார் மனு கொடுத்தால் புகாரை விசாரிப்பதற்கு நத்தம் போலீசார் லஞ்சம் கேட்பதாக கூறி நத்தம் ஆவிச்சிபட்டியைச் சேர்ந்த பள்ளிக்கூடத்தான்70 ,- நாச்சம்மாள் 65, தம்பதியினர் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது: மருமகள் நாச்சம்மாள் 40, இடையே ஏற்பட்ட குடும்பத்தகாராரில் மருமகள் தரப்பை சேர்ந்த ஏழு பேர் தாக்கினர். உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மே 14ல் நத்தம் போலீசாரிடம் புகார் அளிக்க சென்றோம். போலீசார் லஞ்சம் வழங்கினால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கூறி திருப்பி அனுப்பினர். 3 முறைக்கு மேல் அலைக்கழிக்கப்பட்டு திருப்பி அனுப்பினர். மேலும் சம்பவ இடத்தில் இல்லாத எங்களது இளைய மகள் சின்னம்மாள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதிலிருந்து மகளை விடுவிக்க எஸ்.ஐ., ரூ.5000 வாங்கிக்கொண்டார். உரிய முறையில் விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார், செயலாளர் மனோஜ்குமார், நிர்வாகிகள் கலெக்டர் அளித்த மனுவில், நிலக்கோட்டை ஒருத்தட்டு உத்தமநாச்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தை கோயில் பூசாரிகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து நிர்வகித்து வருகின்றனர். 2020ல் கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்கப்பட்டுள்ளது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். தர்மத்துப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகன், தனலட்சுமி, காமராஜ் ஆகியோர் அளித்த மனுவில், தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தின பாண்டி. துணை அலுவலர் அனிதா ரூபி ஆகியோர் இணைந்து திட்டமிட்டு ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்துவதால் குறிப்பிட்டுள்ளனர்.