ஒட்டன்சத்திரம் : சேதமடைந்த சாக்கடை, முடங்கிய கழிப்பறை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 16 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.வினோபா நகர், விஸ்வநாத நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் விஸ்வநாத நகரில் துாய்மை இந்தியா திட்டம் சார்பில் 2015 -- 16 ல் கட்டப்பட்ட பெண்கள் சமுதாய கழிப்பறை இன்னும் திறக்கப்படாமல் பாழடைந்து வருகிறது. மூன்று இடங்களில் புதிதாக சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சாக்கடை அமைக்க வேண்டி உள்ளது. சாக்கடையின்றி சில தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை. பல இடங்களில் சாக்கடை இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. அங்கன்வாடிக்கு தேவை கட்டடம்
எம்.சசிகுமார் ,பா.ஜ.,நகர பொதுச்செயலாளர்,விஸ்வநாத நகர்: வார்டில் உள்ள பல தெருக்களில் சாக்கடை வசதி இல்லை. கழிவுநீர் வசதி உள்ள இடங்களில் புல் பூண்டுகள் முளைத்து சாக்கடையை மறைத்துள்ளது. இந்த வார்டில் உள்ள பல வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அங்கன்வாடிக்கும் புதிய கட்டடம் கட்ட வேண்டும். தேவை சுரங்கப்பாதையில் கூரை
சிவமணி,மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ,ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷன் இரண்டு பக்கங்களிலும் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளை மழை காலத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது. பல தரப்பினரும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மேற்குப் பகுதியில் உள்ள சப்வேக்கு கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதில்லை. இதேபோல் கிழக்கு பகுதியில் உள்ள சப்வேக்கும் கூரை வசதி ஏற்படுத்த வேண்டும். நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
பழனிச்சாமி கவுன்சிலர், (தி.மு.க.,) : அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக வினோபா நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. விஸ்வநாதன் நகர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வீட்டு பட்டா இல்லாமல் இருந்த பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தட்டுப்பாடின்றி குடிநீர் கொடுக்கப்படுகிறது. வார்டில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரூ.7.5 லட்சம் செலவில் விஸ்வநாதநகர் மலைப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது. சமுதாய கழிப்பறையை யாரும் பயன்படுத்த முன்வராததால் நுாலகம் அமைக்க நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். புல் பூண்டுகள் அகற்றப்படும் என்றார்.