| ADDED : மே 02, 2024 06:12 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை கொண்டு வருவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் நடக்கிறது. இப்பணிகளை விரைவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பருவமழை நன்றாக பெய்யும் பொழுது தான் நீர்வரத்து ஏற்படும். ஒரு சில ஆண்டுகள் தவிர்த்து பல ஆண்டுகள் நீர்வரத்தின்றி வறண்டே காணப்படும். காவிரி, அமராவதி ஆற்றிலிருந்து 520 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பது கண்டறியப்பட்டது. இந்த உபரி நீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு சேர்த்தால் வறட்சி நீங்குவதுடன் இப்பகுதியில் வேளாண் தொழில் சிறப்புற நடக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி சட்டசபையில் பேசினர். இதை நிறைவேற்றும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இதற்கான ஆய்வு பணிகள் நடக்கிறது. காவிரி, அமராவதி ஆறுகள் கூடும் இடத்திலிருந்து மிகப்பெரிய குழாய்கள் அமைத்து பம்பிங் சிஸ்டம் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்களை நிரப்பும் வகையில் திட்டம் தயாரிக்க பட உள்ளது. ஆய்வுப் பணிகளை விரைந்து நிறைவேற்றி தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இத்திட்டம் நிறைவேறினால் ஒட்டன்சத்திரம், ஆத்துார் ,வேடசந்துார், நத்தம், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் உள்ள ஏரி குளங்ளுக்கு காவிரி உபரி நீர் கிடைக்கும். இதனால் வேளாண் தொழில் வளர்ச்சி பெறும்.