புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடவு செய்து பொது மக்கள் ரோட்டோரங்களில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றனர் கிருபா பவுண்டேஷன் அமைப்பினர்.ஒட்டன்சத்திரம் பகுதியில் தன்னார்வல அமைப்புகளும்,உள்ளாட்சிகளும் சேர்ந்து பல வகையான மரங்களை நடவு செய்து வேலி அமைத்து பாதுகாக்கின்றன. இவர்களை போல் மாசில்லா ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதில் கிருபா பவுண்டேஷன் அமைப்பினர் முக்கிய பாங்காற்றி வருகின்றனர். இவர்கள் மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற செயல்களில் ஈடுபட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இவர்களின் அடுத்த முயற்சியாக வனத்துறையுடன் இணைந்து ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் வனப்பகுதியை பாழாக்கும் வகையில் துாக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள், மதுப் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். இத்துடன் நின்று விடாமல் ரோட்டோரங்களில் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்தும் வருகின்றனர். பிளாஸ்டிக்கை அகற்றுவோம்
எஸ்.சிவக்குமார்,கிருபாபவுண்டேஷன்,இயக்குனர்,ஒட்டன்சத்திரம்: வனப்பகுதிகளில் செல்லும் மது பிரியர்கள் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசி செல்வது,தாங்கள் கொண்டு போகும் பிளாஸ்டிக் பைகளை போட்டு செல்வதால் வனப் பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. மது பாட்டில்கள் வன விலங்குகளின் கால்களில் காயத்தை ஏற்படுத்தி அவைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும். தினமான ஜூன் 5ல் ஒட்டன்சத்திரம் வனத்துறையும் கிருபா பவுண்டேஷனும் இணைந்து ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில், வனத்துறை செக்போஸ்டிலிருந்து வடகாடு மலை கிராமம் வரை சுமார் 7 கி.மீட்டர் துாரம் ரோட்டின் இரு பக்கங்களிலும் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணியை செய்தோம். தன்னார்வல அமைப்புகள் வனத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் அனைத்து வனப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார். வெப்பமயமாதலை தடுக்க வேண்டும்
எஸ்.சுஜாதா,கிருபா பவுண்டேஷன் மேலாளர்,ஒட்டன்சத்திரம்: புவி வெப்பமயமாக்கலை தடுக்க அதிகமான மரங்களை நடுவது அவசியம். வனப்பகுதியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மனிதர்களின் செயல்பாடுகள் அமைகிறது. வனப்பகுதிக்குள் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. நாங்கள் அவற்றை அகற்ற முடிவு செய்தோம். முன்னதாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம். இதனைத் தொடர்ந்து ரோட்டின் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து சுற்றுச்சூழலை காப்போம் என்றார்.